Friday, October 22, 2010

MGR and Mahendran

இயக்குநர் மகேந்திரன் தனது நினைவுகளை, நமது செய்தியாளர் நா.கதிர்வேலனிடம் நேர்காணலாக தொடர்ந்த போது...

இதற்குள்ளாக நான் ஓர் உபாயத்துக்கு வந்துவிட்டிருந்தேன். அந்தச் சமயம் அந்த ஊரில் காதல் ஜோடி ஒன்றைப் பற்றிய சம்பவம் ஒன்று நடந்தது. அந்த Love affair Scandal-ஆக மாறி ஊரே நாறிப்போயிருந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு எடுத்த எடுப்பிலேயே என்னுடைய பேச்சை இப்படித் துவங்கினேன்.
"நாமெல்லாம் லவ் பண்ணிட்டு எவ்வளவு கஷ்டப்படறோம். ஊரெல்லாம் என்ன மாதிரி பேசுது. இவர் பாருங்க எவ்வளவு ஈஸியா ரோட்லயும், பார்க்லயும் ஜாலியா லவ் பண்ணிட்டு எத்தனை சந்தோஷமா இருக்கார்?" என்றேன். 

படபடவென்று கிளாப்ஸ். 

ஏதோ கவனத்திலிருந்த எம்ஜிஆர் விடுபட்டு என்னையும் கூட்டத்தையும் பார்த்தார். சட்டென்று மேலே கையை உயர்த்தி "நல்லா கை தட்டுங்க" என்றார். கூட்டத்தைப் பார்த்து. 'பேசுங்க'- என்று எனக்கும் சைகை செய்யவே நாற்பத்தைந்து நிமிடத்துக்குப் பேசினேன். மனதில் என்னென்ன குறித்து வைத்திருந்தேனோ அவ்வளவையும் பேசிவிட்டு இறங்கினேன். 

மேடையை விட்டு இறங்கும்போது என்னுடைய கையைப் பிடித்து இழுத்தவர் ஒரு காகிதத்தில் 'எதிர்காலத்தில் மிகச் சிறந்த விமர்சகராக இருப்பார்' - என்றெழுதி என்னிடம் தந்தார். 

அதன்பிறகு சட்டம் படிப்பதற்காக சென்னை வந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னை சட்டம் படிக்க அனுப்பி வைத்ததே என்னுடைய அத்தை ஒருவர்தான். அவருக்கு உள்ளுக்குள் ஒரு நோக்கமிருந்தது. அது பற்றி அப்போது எனக்குத் தெரியாது. சட்டம் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. 

'என்னுடைய பெண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க விரும்புகிறேன். திருமணம் ஏற்பாடு செய்யட்டுமே?' - என்று கேட்டிருந்தார்.
'எனக்கு அந்த மாதிரி எண்ணமே கிடையாது' என்று பதில் போட்டேன். 

'அப்படியானால் உனக்கு இனிமேல் பணம் கிடையாது' என்று பதில் வந்தது. 

அத்தை பணம் அனுப்பவில்லையானால் கல்லூரியைத் தொடர முடியாது. கல்லூரியை விட்டு வெளியில் வருகிறேன், எதிரில் கண்ணப்ப வள்ளியப்பா வந்தார். என்னைப் பார்த்ததும் "சி.பி.சிற்றரசு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறார் சேருகிறீர்களா?" என்று கேட்டார். உடனடியாகச் சேர்ந்து கொண்டேன். சாப்பாடு, தூக்கம், அச்சகம் எல்லாம் ஒரே இடத்தில்தான். 'போர் வாள்' பத்திரிகையில் என்னுடைய பணி சினிமா விமர்சனம் எழுதுவது. சந்தோஷமான வேலை. தாளிக்க ஆரம்பித்துவிட்டேன். 

அந்தக் காலத்தில் மாறன் படம், கலைஞர் படமெல்லாம் வரும்போது என்னுடைய பாணியில் காரசாரமான விமர்சனம் வந்தது. கட்சிக்காரர்களிடம் சலசலப்பை உண்டாக்கிற்று. இம்மாதிரியான விமர்சனம் கட்சிப் பத்திரிகையில் வரலாமா என்று வெளியீட்டாளருக்கு மேலிடத்திலிருந்து பிரஷர் வந்தது. சி.பி.சி.யிடம் புகார் சொன்னார்கள். 

சி.பி.சி சொல்லிவிட்டார்: "சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் விஷயங்களில் தப்பிருந்தா கேளு." 

அந்தச்சமயம் எம்ஜிஆர் காலில் அடிபட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமலிருந்து குணமான பின் 'ராஜா தேசிங்கு' படத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட முதல் பேட்டிக் கூட்டம். நிறைய நிருபர்களுடன் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். அதனைக் கூட்டத்திற்கிடையிலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார் எம்ஜிஆர். "இங்கே வாங்க" என்றார். பக்கத்தில் போனேன்.

"அழகப்பா கல்லூரி மாணவர்தானே நீங்க? இங்கே எப்படி வந்தீங்க?" என்றார். 


கல்லூரியில் படிக்க வந்ததையும் தற்சமயம் அதை விட்டுவிட்டு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்ததையும் சொன்னேன். 

"உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லையே.. நீங்க மறுபடி லா காலேஜ் ஜாய்ன் பண்றீங்க. வீட்டுக்கு வந்து என்னைப் பாருங்க" என்றார். 

எம்ஜிஆர் சொன்னதைப் பத்திரிகையில் வந்து சொன்னபோது வெளியீட்டாளருக்கு ஒரே சந்தோஷம். தகராறு பிடித்தவன் தொலைகிறானே என்று நினைத்தார்களோ என்னவோ கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தார்கள். 

லாயிட்ஸ் ரோட்டிலிருந்த எம்ஜிஆர் வீட்டிற்குப் போனேன். "சினிமாவுக்குன்னு வந்துட்டு சட்டம் படிக்கிறதெல்லாம் சும்மாக்கதை. நீங்க பேசாம இங்கேயே தங்கிக்கிட்டு இதுக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதுங்க" - என்று சொல்லி பொன்னியின் செல்வன் அத்தனை வால்யூம்களையும் கொண்டு வந்து வைத்தார். 

கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுக்கப் படித்தேன். தங்கிக் கொள்ள அதே அறை. அங்கே பக்கத்திலேயே அதே லாயிட்ஸ் ரோட்டிலேயே சங்கர நாராயணன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவனோடு சேர்ந்து மெஸ் ஒன்றில் சாப்பாடு. கையில் பணமில்லை என்பதனால் மூன்று வேளையும் சாப்பிடமுடியாது. ஒரு நாளைக்கு ஒரு வேளைதான். பயங்கரப் பசி வாட்டும். அப்போதெல்லாம் திரும்பப் போய் நண்பனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக வயிறு நிறைய தண்ணீர் குடித்து பசியை ஒரு மாதிரி சமாளிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். 

ஸ்க்ரீன் ப்ளே முடிந்தது. எம்ஜிஆர் ஷூட்டிங்கில் இருந்த சமயம். சைக்கிள் ஒன்றை இரவல் வாங்கிக்கொண்டு திரைக்கதை எழுதியிருந்த கட்டுக்களை எடுத்துக்கொண்டு நேரே ஸ்டுடியோவுக்குச் சென்றேன். எம்ஜிஆரிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிடலாம் என்பது என் எண்ணம். இனிமேலும் பட்டினியுடன் போராட என் உடம்பில் வலு இருக்கவில்லை.

"என்ன இவ்வளவு சீக்கிரம் முடிச்சாச்சா?" என்று கேட்டார் எம்ஜிஆர். அவருக்கு ஆச்சரியம். 


"ஆயிற்று" என்றேன். 


சாவதானமாக என்னுடைய தோளில் கை போட்டவர் "வீட்லருந்து பணம் வருதா? என்றார். 

"என்ன பணம்?" 

"என்ன பணமா? உங்க சாப்பாட்டுச் செலவுக்கெல்லாம் வீட்லருந்து ரெகுலராப் பணம் வருதில்லை?" என்றார். 

"இல்லை" - என்றேன். 

கொஞ்சம் அதிர்ந்தவர் "அப்ப சாப்பாடெல்லாம் எப்படி?" என்று கேட்டார். 

ஒரு நாளைக்கு ஒரே வேளை சாப்பிட்டதையும் பசி எடுக்கும்போது தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டதையும் சொன்னேன். 

அதிர்ச்சியடைந்து போய் தலையில் அடித்துக் கொண்டு எம்ஜிஆர் அழுதார் பாருங்கள். இப்போது நினைத்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. 

உடனடியாக அங்கிருந்த மாணிக்க அண்ணனைக் கூப்பிட்டு "அம்மாட்ட கூட்டிப்போய் இப்பவே இவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொடு" என்று சொல்லி அப்போதே ஜானகி அம்மாளிடம் அனுப்பி வைத்து ஆயிரம் ரூபாய் கொடுக்கச் செய்தார். அன்று துவங்கி அடுத்து ஐந்து வருடங்களுக்கு மாதா மாதம் அதே தொகையை எனக்குத் தந்தார் எம்ஜிஆர்.